நமது பி.வி.எம் குளோபல் பள்ளி. கோவையில் 19.06.18 அன்று மதியம் 1.00 மணியளவில் தமிழ்த்துறை சார்பில் விளையாட்டுகள் என்னும் தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது. திருவாளர்.ஆபிரகாம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார். மூன்றாம் வகுப்பு மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டனர். நம் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவி செல்வி.ஆராதனா சிறப்பு விருந்தினரை வரவேற்று பூங்கொத்து வழங்கினாள். இறைவணக்கத்திற்குப் பின் விளையாட்டுகள் என்னும் தலைப்பில் திருவாளர்.ஆபிரகாம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரின் ஆக்கப்பூர்வமான பேச்சால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். தமிழர்களின் வீரவிளையாட்டுகளான ஏறுதழுவுதல்,உறியடித்தல்,இளவட்டக்கல் பற்றியும், முந்தைய கால தமிழர் பொழுதுபோக்கு விளையாட்டுகளான தட்டாங்கல், நொண்டி,சடுகுடு பற்றி உரையாடல் வழி அருமையாகவும், , மாணவர்களுக்கு எளிதில் விளங்குமாறும் எடுத்துரைத்தார்.அலைபேசி விளையாட்டுகளின் தீமை பற்றியும், உடல் உழைப்போடு கூடிய வெளியரங்க விளையாட்டுகளின் நன்மை பற்றியும் நயமுடன் எடுத்துரைத்தார். மாணவர்கள் அலைபேசி விளையாட்டினைத் தவிர்த்து,நண்பர்களுடன் உடல்,உள நலன் காக்கும் வெளியரங்க விளையாட்டுகளையே விளையாடுவோம் என்று உறுதிமொழி எடுத்தனர். மாணவன் பிரஜீத் நன்றி மடல் வழங்க, சிறப்புரை இனிதே நிறைவு பெற்றது.